"வெண்ணிலவே, வெண்ணிலவே"

பௌர்ணமி நிலவும், பனி விழும் இரவும் கிடைத்து விட்டால் நீங்களும் நானும் கூட கவிதை எழுதலாமா என்று யோசிப்போம். அதுவே கவிஞர்களாக இருந்தால் கேட்கவும் வேண்டுமோ. அவளோ அழகி. அவனோ இளைஞன் .நேரமோ இருள், ஒளி இரண்டோடும் சேராத பொன் நேரம். ஒரு ஹிட் பாடல் கொடுக்க இதைவிட சிறந்த Situation என்ன இருக்க முடியும். அதுவும் இந்த Situation-ஐ வைரமுத்து சார் கையில் கொடுத்தால் . ஆஹா . ஒரு சில பாடல்களை  எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது. அப்படி ஒரு பாடல் இது. 
அவளோ பொய்க் கோபம் கொண்டு அவனைப் பேசக் கூடாது என்கிறாள். அவன் பேசத்தானே கூடாது. பாடக் கூடாது என்று சொல்லவில்லையே என்று பாட தொடங்குகிறான். அவள் கோபத்தை தணிக்க வெண்ணிலவை விண்ணைத் தாண்டி விளையாட, ஜோடியாக அழைக்கிறான் ,ஒரு ஒப்பந்தத்தின் பேரில். விடிவதற்குள் யாரும் பார்க்கும் முன்னே அதிகாலை திருப்பி அனுப்பி விடுவதாக. (குரல், ஹரிஹரன், சாதனா ஸர்கம் ) . "மின்சார கனவு " படத்தில் இடம் பெற்ற "வெண்ணிலவே , வெண்ணிலவே " பாடல். இயக்குனர் ராஜிவ் மேனன்.

இந்த பாடலின் அழகு பிரபு தேவா , கஜோல் நடனத்திலா, இல்லை வைரமுத்து வரிகளிலா , A.R.ரஹ்மான் இசையிலா, அந்த நைட் லைட் எபெக்ட் படப்பிடிப்பிலா ,அந்த அழகுப்பெண் கஜோல் எக்ஸ்பிரஷன்ஸிலா,  பாடகர்களின் குரலிலா என்று ஒரு பட்டி மன்றமே நடத்தலாம். அந்த அளவுக்கு ஒன்றை ஒன்று மிஞ்சும் அழகு.

அந்த நடனத்தின் பெயர் என்ன என்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ப்ளீஸ். பிரபு தேவாவிற்கு தேசிய விருது பெற்றுத் தந்த பாடல்.
அவனின் பாடல் அழகிலும் , நடன அசைவிலும் அவளின் கோபம் குறைகிறது. எனினும் உடனே இறங்கி வந்து விடுவாளா பெண். அவள் சிரிப்பை மறைக்க அவனுக்கு முகம் காட்டாமல் திரும்புகிறாள். அவன் மறுபுறம் வர அவள் வேறு புறம் திரும்புகிறாள். அப்போது அவளின் கூந்தல் அலை பாய்வதை பார்க்கும் பொது நம் மனமும் சேர்ந்தே அலை பாய்கிறது. கதிர் பாயும் அவள் கண்கள் மூடினால், இரவு வந்து விட்டதோ என்று நினைத்து  சில மாலைநேர மலர்கள் மலர்ந்து விடும் என்று பாடி அவளை மேலும் மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறான். 
 "தலை சாயாதே ,விழி மூடாதே சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்" (ப்ப்பா. என்ன கண்ணுடா?!! அந்த காந்த கண்ணழகி கஜோல் இன்னும் சில தமிழ் படங்களில் நடித்திருக்கலாமே என்ற ஏக்கத்தை தவிர்க்க முடிய வில்லை) 

அவன் விரல்கள் செய்யும் மந்திர அசைவுகள்  ஊமையையே பாட வைத்து விடும். அவளோ தாளிக்கும்  ஓசையிலும், தண்டவாள ரயிலின் ஓசையிலும் சங்கீதத்தை ரசிக்கும் ரசிகை. அவள் மகிழ்ந்து , நெகிழ்ந்து , மயங்கி அவனை நெருங்கவும் , அவன் விலகவும் காரணம் அறியாமல் திகைக்கிறாள்.பின் நடனத்தில் திளைக்கிறாள்.அதன் பிறகு நெருங்கி , விலகி, நெருங்கி, விலகி ஒரு கண்ணாமூச்சி நடனம்.
 "எட்டாத உயரத்தில் நிலவை  வைத்தவர் யாரு" என்று கேட்டுக் கொண்டே  அவன் கரம் பற்ற விழைகிறாள்.அவன் திடுக்கிட்டு கையை விலக்கிக் கொள்ள "கையோடு சிக்காமல் காற்றை வைத்தவர் யாரு" என்ற வரிகளோடு அவனே எதிர் பாராமல் அவள் இடது கையால் அவன் கரம் பற்றுகிறாள்.     காற்று வேண்டுமானால் கையில் சிக்காமல் போகலாம் உன் கைகள் சிக்கிக் கொண்டது பார்த்தாயா என்பது போல் ஒரு சிரிப்பு சிரித்து விட்டு நடனத்தை  தொடர்வார் கஜோல்.
அவர்கள் இயற்கையை வியக்க, நாம் இந்த இணையினை வியக்க 
"பூங்காற்றும்  அறியாமல் பூவைத்திறக்க வேண்டும் , பூ கூட அறியாமல் தேனை  ருசிக்க வேண்டும்" என்று அவள் பாடல் படிக்க,
 "ஆம் , உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு " என்று அவன் பாடலை முடிக்கிறான். வெண்ணிலாவைத் துணைக்கழைத்த அவனுக்கு ஒரு பெண்ணிலவு துணையாய்  கிடைத்தது.
அவர்கள் இருவரும் கரங்கள் கோர்க்க, நம் மனதும் அந்த நிலவிலும் , இனிய நினைவிலும் நனைகிறது.

நண்பனுக்காக அவளிடம் தூது வந்தவன் அவனே காதலில் விழுகிறான். (இனி நண்பனை மட்டும் காதலுக்கு தூது அனுப்பவே கூடாது என்று அந்த கால இளைஞர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டதெல்லாம் காமெடி கலாட்டா )


காஜோலின் அந்த குட்டி டிரஸ் செம க்யூட். அந்த ட்ரெஸ்ஸில் இம்ப்ரெஸ் ஆகி எங்கள் வீட்டுக்  குட்டி  குழந்தைகளுக்கு  அதே ஸ்டைல்  டிரஸ் எல்லாம் வாங்கி கொடுத்திருக்கிறேன் நான். நீங்க யாராவது அப்படி செய்திருந்தால் கமெண்ட் போஸ்ட் பண்ணுங்க.


இனி ரசியுங்கள் "வெண்ணிலவே, வெண்ணிலவே"


Comments

  1. விமர்சனத்தின் ஆரம்பெத்திலிருந்தே நாங்கள் பாடலை ரசிக்க ஆரம்பித்து விட்டேன்.

    ReplyDelete
  2. Coriography க்காக பிரபு தேவா வுக்கு தேசிய விருது பெற்று தந்த பாடல் என்பதை விட்டு விட்டீர்களே Dheeksha.

    ReplyDelete
    Replies
    1. Missed it mam. Now added the message. Thank you.

      Delete
  3. உங்கள் வர்ணனையின் அழகு சிறப்பு. கவிஞர் , நிலவை விளையாடக் கூப்பிட்டால் நீங்கள் அந்த இருவரையும் நமது வரவேற்பறைக்கே அழைத்து வந்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?" முழு பாடல் வரிகளுடன்

"மாலைப் பொழுதின் மயக்கத்திலே"

ஒரு பொய்யாவது சொல் கண்ணே "