"உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது"

மாநிலம் ஆளும் மாதரசியின் மகன் அவன். இருந்தும் அவனுக்கு அன்னை இல்லை. அறிவார்ந்த ஐந்து தம்பியரின் அண்ணன் அவன். இருந்தும் அவனுக்கு தம்பியர் யாரும்  இல்லை. மேலும் தர்மத் தாயின் தலைமகன் இவன். இருந்தும் இவன் மரணத்தில் தான் மகனே என்று கூப்பிட்டு மடியேந்த அன்னையர் இருவரும் வந்தனர். மாயை என்பதன் அர்த்தத்திற்கு அகராதி எழுதுவதற்கு தான் அந்த மாயக் கண்ணன் இவனை படைத்தானோ. கண்ணனுக்கும் கர்ணனுக்கும் ஓர் எழுத்து தான் வித்தியாசம். இருப்பினும் அந்தக் கண்ணனை விட கர்ணனை ஒரு படி மேலே உயர்த்திப் பிடித்தது அவனது கருணை உள்ளமே. " உன் தர்மத்தின் பலனை எல்லாம் எனக்குத் தருவாயா ?" என்று அந்தக் கடவுளையே கர்ணனிடம் கையேந்த வைத்தது அந்தக் கருணை தான்.

"உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா( மனிதா) வருவதை எதிர்கொள்ளடா" இது பாடல் அல்ல வாழ்க்கை பாடம். (இன்றைய காலகட்டத்திற்கு இது மிகவும் தேவையான வரிகள்) கர்ணனை நாம் யாரும் பார்த்ததில்லை, ஆனால் கர்ணன் இப்படித்தான் இருப்பார் என்று மனது பிக்ஸ் பண்ணிக் கொண்டது. காரணம் சிவாஜிகணேசன். (ராஜராஜசோழன் எப்படி இருப்பார்? நம்ப சிவாஜி மாதிரி இருப்பார். வீரபாண்டிய கட்டபொம்மன் எப்படி இருப்பார்? அவர் சிவாஜி மாதிரி தான் இருப்பார் விவேகானந்தர் எப்படி இருப்பார்? அட அவரும் சிவாஜி மாதிரி தான் இருப்பார். விசுவாமித்திரர்? பாரதியார்? அந்த பரசிவன்? அட எல்லோருமே நம்ப சிவாஜி மாதிரி தான்பா இருப்பார்ள்) எல்லா பாத்திரங்களையும் நம் கண் முன் கொண்டு வந்து காட்டியவர் நம்ம சிவாஜி சார் தான்.

கண்ணனாக நடித்த என்.டி.ஆர், "தேவுடா, தேவுடா" என்று தெலுங்கு தேசமே கொண்டாடி தீர்த்த தெலுங்கு சூப்பர் ஸ்டார். கண்ணன் வேஷத்திற்கு அவ்வளவு பொருத்தம். 

"மன்னவர் பணி ஏற்கும் கண்ணனும் பணி செய்ய உன்னடி பணிவாரடா.
கர்ணா, மன்னித்து அருள்வாயடா"
என்று அந்தக் கண்ணனை கதற வைத்தவர் கர்ணன்.
கண்ணன் அந்தணர் வேஷத்துக்கு மாறி கர்ணனிடம் வந்து
"செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா, வஞ்சகன் கண்ணனடா, உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா வருவதை எதிர்கொள்ளடா" என்று பாடும்போது "இதெல்லாம் எனக்கு சாதாரணமப்பா" என்பதுபோல் அந்த மரண வேதனையில் கூட சிவாஜி ஒரு குலுங்கு குலுங்கி கண்களை மேலே உயர்த்தி ஒரு சிரிப்பு சிரிப்பார் பாருங்கள், காட்சியின் கனம் தாங்காமல் பாடல் முழுதும் வீணை அழுகின்றதை கேளுங்கள். கண்ணதாசனின் வரிகளை கேளுங்கள். எப்படிப்பட்ட மேதைகள் உடன் எல்லாம் நாம் வாழ்ந்திருக்கிறோம் என்று மனது பெருமிதத்தில் விம்முகிறது.

நட்பா ,செஞ்சோற்றுக் கடனா,வில்வித்தையா , வள்ளல் தன்மையா,குரு பக்தியா எல்லாவற்றிற்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய பாத்திரம் கர்ணன். அதற்கு உயிர் கொடுத்தவர் சிவாஜி. பாடலை எழுதிய கண்ணதாசன் , இசையமைத்த எம்எஸ்வி, பாடலை பாடிய சீர்காழி கோவிந்தராஜன், நடித்த சிவாஜி கணேசன் ,என் டி ஆர், முத்துராமன் , படத்தின் டைரக்டர் பி.ஆர். பந்துலு யாரும் இப்போது நம்மிடையே இல்லை. ஆனால் இன்று வரை அவர்களின் பாடல் நம்மிடையே உலா வருகிறது. மனிதர்கள் மரிக்கிறார்கள். மகா மனிதர்கள் மரிப்பதில்லை. "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது …. இந்தப் பாடல் உங்களை உறங்க விடாது என்பது வல்லவன் வகுத்ததடா"



I am sure It's a Master Piece.

https://www.youtube.com/watch?v=GxG9EzeAXi4

Comments

  1. Super Vimarsanam Dheeksha. கேட்கும் போதெல்லாம் மனதை பிழிந்தெடுக்கும் பாடல். கண்ணை விட்டு மறைய மறுக்கும் காட்சிகள்.

    ReplyDelete
  2. இந்தப் பாடல் உங்களை உறங்க விடாது என்பது வல்லவன் வகுத்ததடா-super!!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?" முழு பாடல் வரிகளுடன்

"மாலைப் பொழுதின் மயக்கத்திலே"

ஒரு பொய்யாவது சொல் கண்ணே "