என்னை என்ன செய்தாய் வேங்குழலே




 நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 

இந்த கண்ணன் கைக்குழலுக்கும், காதல் கன்னியருக்கும் அப்படி என்ன ஒரு பகையோ தெரியவில்லையே? இந்த சௌந்தர்ய நாயகி குழலைப் பார்த்து கேட்கும் கேள்வியை நீங்களும் கேளுங்கள். 

"என்னை என்ன செய்தாய் வேங்குழலே

எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே

எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே…..

நாளும் சுக நாதம் தந்து அனல் மெழுகாய்

இந்த இள மனம் இளகிடவே

என்னை என்ன செய்தாய் வேங்குழலே… ஏ…ஏ….. "

சௌந்தர்யா செம அழகு இந்த பாட்டில். பாடலின் தொடக்க ஆலாபனையில் குளோசப்பில் காட்டும் அவர் முகம், கூந்தலில் சூடிய மல்லிகைச்சரம் , நீண்ட நெற்றி திலகம் , சேலைத்தலைப்பை       தோளை சுற்றி போர்த்திக் கொள்ளும் பாந்தம் அருமை. 

வேள்வியின் விளைவென்பது தன்னை அறிதல். அந்த இன்பத்தை உணர்தல். என்றும் இசை வேள்வி நடத்தி , நல்லின்பம் படைத்த நாயகி தன்னைப் பற்றி இவ்வாறு கூறுகிறார் 

"வேறு ஞாபகங்கள் வருடாமல் நானிருந்தேன்."

"எய்தவன் இருக்க அம்பை நோவது ஏன் ?" என்று உணர்ந்த நாயகி இப்பொழுதுதான் எய்தவனை பற்றி யோசிக்க ஆரம்பிக்கிறாள்

"யாரோ… அவன் யாரோ…

யாரோ… அவன் யாரோ…

யமுனா நதி தீரத்தில் அமர்ந்தொரு இசை கலையால்

என்னை என்ன

செய்தாய் வேங்குழலே…"

இடையே வரும் பார்த்திபனின் குட்டி குட்டி கவிதைகள் எல்லாம் கேக்கின் மேல் செர்ரி ,கேசரியில் முந்திரி. 

"அடடா… தாளம் இடும் கைக்கும்

தட்டுப் படும் உன் தொடைக்கும் இடையே

நான் சிக்கிக் கொண்டிருப்பதை

கண்டு கொண்டேன்" 

சிக்கிக் கொண்டது பார்த்திபன் மட்டுமா?பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் தான்.

"மூங்கில் போலே விளைந்தொரு

மங்கை இருக்க

துளைக்கும் வண்டாய் மனதை

துளைத்தாய் நீயே"

குழலிசை கேட்டு கேட்டு அவளே ஒரு குழல் ஆகிப் போன விந்தையை என்ன சொல்ல?

"தூங்கும் யாழாய்

தனிமையில் தோகை இருக்க

ஆஆஆ…..ஆஆ…..ஆஆஆ……

மீட்டும் விரலாய் நரம்பினில் நடந்தாய் நீயே"

நரம்பு எங்கும் நர்த்தனமிடும் இசையை, அதன் இனிமையை விரும்பாதவளா அவள்? இசை அரசி ஆயிற்றே? இதெல்லாம் பொய் கோபம் என்பது நமக்கு புரியாமலா போய்விடும்?

அன்பு அதிகமான இடத்தில்தான் இந்த கோபம் அதிகமாக இருக்கும்.

"வண்ணம் மலர் உண்டு

வெள்ளி அலை உண்டு

வருடிடும் காற்றென உலவ போ

பச்சைக் கொடி ஒன்று

பசும் புல் மடி உண்டு

நீர் துளியை போல தழுவ போ"

தன் குழந்தையின் குறும்பை உள்ளூர ரசித்துக் கொண்டே, வெளியே மிரட்டும் அன்னை உங்கள் கண் முன் தோன்றவில்லை? மேற்கண்ட வரிகளை கேட்கும் பொழுது.

இசையே நுழையாத எத்தனையோ  செவிகள் இருக்கின்றன. அங்கெல்லாம் உன் திறமை பலிக்கவில்லை ,ஆனால் என்னை அனுதினமும் வந்து வருத்துகின்றாய் இது நியாயமா? செல்ல கோபம் தெள்ளத் தெளிவாக விளங்குகின்றது. பாடலாசிரியர் கவிஞர் வாலி. டைரக்டர் பார்த்திபன். இளையராஜாவின் இன்னிசையில் , சுதா ரகுநாதனின் இனிய குரலில்   பார்த்து கேட்டு ரசியுங்கள் அருமையான பாடல். விரைவில் அடுத்த பாடல் விமர்சனத்துடன் உங்களை சந்திக்கிறேன்.



                                                                                                 "இவண்"

                                                                                                     தீக்ஷா

https://youtu.be/H9Fyy-E2YHs











Comments

  1. Even though it is quite long time, it's bang on.quite intresting explanation of lyrics. lyricist has the freedom of flying in dreams of creativity and so you too. Your review made me to hear the song fo the first time and enjoyed it.Thanks and let your creativity too fly high in the coming days in your blog. Keep going
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?" முழு பாடல் வரிகளுடன்

"மாலைப் பொழுதின் மயக்கத்திலே"

ஒரு பொய்யாவது சொல் கண்ணே "