பொன்மாலை பொழுது

 


ஒரு பொன்மாலை பொழுதில், வைரமுத்துவுக்கு திரையுலகம் வாசல் திறந்து, வாரியணைத்துக் கொண்ட பாடல் . வைரமுத்து, எஸ்பிபி ,இளையராஜா, பாரதிராஜா என்ற வெற்றிக்கூட்டணி




"ஹே ஹோ ஹோ லல்லல்லா" என்ற எஸ்பிபி தொடங்கும்போதே நமக்குள் ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்கிறது இல்லையா. 

சூரியன் மறையும் அந்தி வேளையில் வானம் கொள்ளும் சிவப்பு நிறத்தை நானும் பார்க்கும்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன் எவ்வளவு அழகான வர்ணஜாலம் என்று. நமக்கு கற்பனை அதைத்தாண்டி செல்லவே மாட்டேன் என்கிறது. ஆனால் வைரமுத்துவுக்கோ அது வான மகளின் நாணச் சிவப்பாக தெரிகிறது. 

உலகமே பார்க்க வெளிர் நீல உடை நெகழ்த்தி, கரு நீல உடை உடுத்தும் வானமகள் நாணாமல் என்ன செய்வாள்?

பாவம் பெண்ணல்லவா? அவளின் அந்த வெட்கச் சிவப்பை கவிஞர்கள் கண்டு சொன்னால்தான் உண்டு. அதனால் என்ன, அவர்கள் சொன்ன பிறகாவது  ரசித்து கொள்வோம்.

வைரமுத்துவின் வர்ணனை வரிகளையும், SPB யின் குரலையும் கேட்டுத்தான் வானமகள் நாணுகிறாளோ என்றும் ஒரு சந்தேகம் எனக்கு.

"இது ஒரு பொன்மாலை பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்"

இரவின் நிலவொளி மரங்களின் வழியே நுழைந்து நம் வாசலில் போடும் கோலம் இருக்கிறதே? கலைடாஸ்கோப் காட்சிகள் மாதிரி நிமிடத்திற்கு நிமிடம் மாறிக் கொண்டே இருக்கும் வண்ணக்கோலங்கள் அல்லவா? 

"ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும்"

பகலுக்கும், இரவுக்கும் பாலமிடும் வானம் ,அதற்கு தாளமிடும் பறவைகளின் கானம். 

புவியரசர்களுக்கு இளமங்கையர்கள் சாமரம் வீசினால், இந்த கவிப்பேரரசருக்கும் , சங்கீத சக்கரவர்த்தி SPB க்கும் இயற்கை அன்னையே சாமரம் வீசுவாள் இல்லையா?

"பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ"

ஒற்றை போதி மரத்தடியில் அமர்ந்து சித்தார்த்தன் புத்தன் ஆனார். ஆனால் அந்த வானமே போதிமரமாக நினைத்து அமர்ந்த எங்கள் வைரமுத்து எத்தனை புத்தன் ஆவார். அதுவும் நாளும் அவருக்கு அது சேதி தரும்போது. தமிழுக்கு வைரமுத்து ஆற்றிய பணி அளவிடற்கரியது.

என்ன ஒரு கற்பனை ? வெட்டவெளியில் அமர்ந்து அப்படியே நிமிர்ந்து வானத்தைப் பாருங்கள் அப்படியே ஒரு போதி மரம் போல் தோன்ற வில்லை?


                                    

ஐயோ, எஸ்பிபி வாய்ஸ் என்னவென்று சொல்வேன் ? அவர் கொஞ்சும் குரலில் பாடும் அழகு இருக்கிறதே? அதற்கு சரியான இணை இளையராஜாவின் இசை. 

"ஒரு நாள் உலகம் நீதி பெறும் 

திருநாள் நிகழும் தேதி வரும்"

இந்த நம்பிக்கை அச்சாணியில் தான் உலகத்தேர் உருண்டு கொண்டிருக்கிறது.

"கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்"

வேள்விகளின் பலன்கள் என்றும் நன்மையாகவே முடியும். 

உங்கள் பொன்மாலை பொழுதுகளில் மொட்டை மாடியில் அமர்ந்து தேனீருடன் பருக சிறந்த காம்பினேஷன் இந்தப் பாடல். தினமும் கேட்டால் உங்களுக்கும் ஞானம் கிடைக்கலாம். 

வாழ்த்துக்கள் !

https://youtu.be/Ux0LERGc1cc


Comments

Popular posts from this blog

"கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?" முழு பாடல் வரிகளுடன்

"மாலைப் பொழுதின் மயக்கத்திலே"

ஒரு பொய்யாவது சொல் கண்ணே "