மயக்கமென்ன இந்த மௌனமென்ன /Mayakkam Enna Indha Mounam Enna




இந்த உலகத்தை நிற்காமல் சுழல வைத்துக் கொண்டிருக்கும் ஒற்றை மந்திரச்சொல் "காதல். "


உலக உயிர்களுக்கெல்லாம் தாஜ்மஹால் மூலம் தன் காதலை உரக்கச் சொல்லிய ஷாஜகான்  , தனது காதலி மும்தாஜுக்கு தன் காதலை உணர்த்தி இருப்பானா என்ற சந்தேகம் என் மனதிற்குள் இன்னும் இருக்கிறது. 


அந்த விஷயத்தில் இந்த ஜமீன்தார் அந்த ஷாஜகானை மிஞ்சிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். 


நாமெல்லாம் காதல் பரிசளிக்க என்ன செய்வோம் ? ஒரு கிரீட்டிங் கார்டையோ, ஒரு தாஜ்மஹால் பொம்மையோ, வாட்ச் அல்லது  மொபைலையோ தேர்ந்தெடுப்போம். மாதம் முதல் தேதியா, கடைசி தேதியா என்பதைப் பொறுத்து பரிசு மாறுபடும். இவர் அளித்த காதல் பரிசு பாருங்கள்



"இது இறந்து போன மும்தாஜுக்காக கட்டப்பட்ட தாஜ்மஹால் அல்ல உயிரோடு இருக்கும் என் காதல் தேவதைக்காக நான் கட்டிய வசந்த மாளிகை"  என்று நாயகன் கூறும்பொழுது நாயகி தடாலென்று மயங்கி விழாமல் இருந்ததுதான் ஆச்சரியம். 


நாயகிக்கும் நாயகனுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருந்தும் நாயகனின் காதல்,  நாயகியை அந்த மலை உச்சிக்கே தூக்கிச் சென்று விடுகிறது ந்த "ஆனந்த" அதிர்ச்சியில் அவளின் நிலை என்னவாக இருக்கக் கூடும்? பேச வார்த்தைகளின்றி அவள் திகைத்து நிற்கும் நிலை கண்ட நாயகன் "மயக்கம் என்ன? இந்த மௌனமென்ன?" என்று பாடத் தொடங்குகிறான். காலம் முழுதும் மதுவின் மயக்கத்திலேயே இருந்தவன் அல்லவா? இந்த மாதுவின் மயக்கம் புதிதாய் தோன்றுகிறது.

நாயகியின் மௌனத்தை கூட அவன் மயக்கமோ என்று எண்ணுகிறான். டிஎம்எஸ் பாடலின் முதல் வரியை தொடங்கும் அந்த கணீர் குரல் பார்வையாளர்களையும் மயக்கத்தில் வீழ்த்தி விடுகிறது. மௌனத்தில் ஆழ்த்தி விடுகிறது. 


"மயக்கமென்ன இந்த மௌனமென்ன

மணி மாளிகைதான் கண்ணே

தயக்கமென்ன இந்த சலனமென்ன

அன்பு காணிக்கைதான் கண்ணே"

என்ற நாயகன் வினவ, 

"கற்பனையில் வரும் கதைகளிலே நான் கேட்டதுண்டு கண்ணா

என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே நினைத்ததில்லை கண்ணா"

என்று நாயகி மௌனத்தை உடைக்கிறாள். சுசிலாவின் அமுதத் தேன் குரல் மனதை நிறைக்கிறது.





மாளிகை மட்டும் போதுமா? மேலும் நாயகனின் கற்பனை விரிகிறது. தேவதை பெண்ணுக்கு ஊஞ்சல் வேண்டுமாம். அதுவும் சாதாரண ஊஞ்சல் வேண்டாமாம் , பொன்னூஞ்சல் வேண்டுமாம். அதுவும் எப்படி தேர் போல !


"தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் அதில் தேவதை போலே நீ ஆட

பூவாடை வரும் மேனியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட

கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின் மீதே கோலமிட" 




"கை வளையும் மை விழியும் கட்டி அணைத்து கவி பாடும் பொழுது அதிலிருந்து மீள்வது அவ்வளவு சுலபமா என்ன?


"பாடி வரும் வண்ண நீரோடை உன்னை

பாத பூஜை செய்து வர

ஓடி வரும் அந்த ஓடையிலே உன்

உள்ளமும் சேர்ந்து மிதந்து வர

மல்லிகை காற்று மெல்லிடை மீது

மந்திரம் போட்டு தாலாட்ட

வள்ளி மலைத்தேன் அள்ளி எழுந்து

வண்ண இதழ் உன்னை நீராட்ட'


கவிஞரின் இளமை துள்ளலுக்கு கட்டியங்

கூறும் வரிகள். நீரோடையில் ஆரம்பித்து,

நீராட்டுவதில் முடித்துவிட்டார்.

கவிஞரே !! ...





நாயகனோ மது அருந்த மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறான். நாயகியோ மது அருந்தாமல் விடமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாள். இந்த புதுமையும் கொஞ்சம் கேளுங்கள்.


"அன்னத்தை தொட்ட கைகளினால்

மதுக் கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்

கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து

மதுவருந்தாமல் விட மாட்டேன்"


"ஒரு கோப்பையிலே குடியிருந்த ஒரு கோலமயிலுக்கு துணை இருந்த "

கண்ணதாசன் வரிகள். மதுவும் காதல் மயக்கமும் கரை புரண்டோட கேட்கவா வேண்டும்?



ராமாயண காலம்தொட்டு எல்லா நாயகர்களும் சொல்லும் அதே டயலாக் இந்த நாயகனின் உதடுகளும் உதிர்க்கின்றன.


"உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான்

உள்ளத்தினாலும் தொட மாட்டேன்"


பதில் முற்றிலும் எதிர்பாராதது.  நாயகன் மட்டுமல்ல நாமும் தான் . 


"உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை

உயிர் போனாலும் தரமாட்டேன்" 


இந்த இடத்தில் சுசீலாவின் குரலும் ,குரலின் குழைவும் , ஆஹா ! ஆஹாஹா!!


இந்த இடத்தில் நாயகன் நிலை என்னவாக இருக்கும் என்று எண்ணி பாருங்கள். அவன் இதயம் அவளின் காதலிலும், பெருமிதத்திலும் நிரம்பி வழிகின்றது


தைக்கேட்ட நாயகனும் மயங்கித்தான் போகிறான். 


ஆனந்த் ,லதாவின் , சாரி சிவாஜி ,வாணிஸ்ரீ யின்  உடைகள் கண்களைக் கவர்கின்றன. அந்தளவுக்கு கேரக்டரில் ஒன்றிப் போன நடிப்பு இருவருமே. 


சிவாஜியின் தாயார் இறந்து ஐந்தே நாட்களில் இந்த  பாடல் படப்பிடிப்பில் வந்து கலந்து கொண்டிருக்கிறார். சொந்த சோகம் கடுகளவு கூட வெளிப்படாமல் என்ன ஒரு நேர்த்தியான நடிப்பு . சிவாஜி மகா கலைஞன் . தமிழர்களுக்கு கிடைத்த வரம்.


கேவி மகாதேவன் இசை காதுகளில் தேனாகப் பாய்கின்றது. தமிழ் திரைப்படங்களில் முதன்முதலில் “ஸ்லோ மோஷன்” அறிமுகமான பாடல் இது. அதைப் பார்க்கும்போது எவ்வளவு மகிழ்ச்சியாக ஆச்சரியமாக இருந்திருக்கும் அப்போது? .


உங்கள் மனதை  மயக்கும்,

மனதை விட்டு நீங்காத பாடல்.


கீழ்  உள்ள யூடியூப் லிங்கை கிளிக் பண்ணி பாடலைப் பார்த்து ரசிக்கலாம்.


https://youtu.be/0gV6VtbarO8



Comments

  1. மிகவும் அருமையாக உள்ளது என்னுடைய வாட்ஸ் அப்புக்கு அனுப்பவில்லை என்றால் பரவாயில்லை நான் பதில் அனுப்ப வேண்டியது என்னுடைய கடமை

    ReplyDelete
  2. ரொம்ப colorful aa இருக்கு. சிவாஜி, வாணிஸ்ரீ படங்கள், பாடல், அந்த வசந்த மாளிகை, Dheeksha வின் விமர்சனம் எல்லாமே.

    ReplyDelete
  3. Apt tribute to the legendary actor. மிக அழகான பாடல் அருமையான விமர்சனம் கூடவே வண்ண படத்துடன் அருமை. கண்ணதாசன் வரிகள், கே.வி இசை, சுசிலா குரல் மிக பிரமாண்டம். மறக்க முடியாத பாடல் இன்றும், என்றும்.நன்றி,வாழ்த்துக்கள். God bless.

    ReplyDelete
  4. நீங்கள் குறிப்பிட்டது போல்... தாஜ்மகால் போலல்லாமல் ...உயிரோவியமாக இருக்கும்... தன் காதலிக்காக ...

    வசந்த மாளிகை கட்டிய காதலனாக நடிகர் திலகத்தின் நடிப்பை இத்திரைப்படம் மிக அருமையாக காட்டியது...பாடலும் படம் பிடிக்கப்பட்ட விதமும்... தமிழ்சினிமா....என்றும் மறக்காது! முதன் முறையாக slow motion முறையில் சில காட்சிகள் இந்தப் பாடலில் படம் பிடிக்கப்பட்ட விதம் கண்டு நாங்கள் அப்போது வாய் பிளந்து ரசித்து...நண்பர்களுடன் பேசிப் பேசி பார்த்திருக்கிறோம்!

    ReplyDelete
    Replies
    1. மிகவும் மகிழ்ச்சி. நம் ரசனை ஒரே விதமாக இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.நன்றி

      Delete

Post a Comment

Popular posts from this blog

"கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?" முழு பாடல் வரிகளுடன்

"மாலைப் பொழுதின் மயக்கத்திலே"

ஒரு பொய்யாவது சொல் கண்ணே "