அதிசய ராகம் ஆனந்த ராகம் முழு பாடல் வரிகளுடன்

 




ஒரு கோப்பையிலே குடியிருந்த அந்த கோமானின் பாடல்களை கேட்கும் நமக்கும் அல்லவோ மயக்கம் வருகிறது. இருந்தும் அவரது பாடல்களை ரசிக்காமலா இருக்க முடிகிறது?


இசையரசி அவள் . இசை ரசிகன் அவன். ரசனை கொஞ்சம் எல்லை மீறிப் போக அந்த இசையரசியையே ரசிக்க தொடங்குகிறான் அவன்.


அவன் யாரையோ காதலிக்கிறான் என்று தெரிகிறது. ஆனால் யார் அவள்?  என் இசை வகுப்பிற்கு பல பெண்கள் வருகிறார்கள். கல்யாணியும் வருகிறாள், கமலாவும் வருகிறாள் . எப்படி தெரிந்து கொள்வது என்றெண்ணிய அவள் அவனிடமே இந்த கேள்விக்கணையை தொடுக்கிறாள்  " உன் காதல் நாயகி யார் ? அவள் பெயர் என்ன ? ராகமா? மலரா? என்று. இந்தக் கேள்வியின் நாயகிதான் அவனின் காதல் நாயகியும் என்ற உண்மை அறியாமல்.


அப்பொழுது கே.ஜே. யேசுதாஸ் தன் மயக்கும் மந்திர குரலில் பாடலை தொடங்குகிறார் . அப்போது தொடங்குகிறது ஒரு "அதிசய ராகம்"


"அதிசய ராகம் ஆனந்த ராகம்

அழகிய ராகம் அபூர்வ ராகம்"


முதல் இரண்டு வரிகள் முடிந்ததும் வரும் அந்த மிருதங்க இசை உங்கள் மனதை துள்ளாட்டம் போட வைக்கும். அது ஒரு "ஆனந்த ராகம்". இசை மெல்லிசை மன்னர் எம்எஸ்வி. யாராக இருக்கும் ?அவள் யாராக இருக்கும்?  என்று நாயகி குழம்ப, அவளின் அழகை வர்ணிக்க தொடங்குகிறான்.


இந்த இடத்தில் மியூசிக் மாறும் போது குளுகுளு என்று ஒரு நீரூற்று உற்பத்தி ஆகி நம் மனதை  நனைக்கும். டைரக்சன் கே.பாலச்சந்தர்.



"வசந்த காலத்தில் மழை தரும் மேகம் - அந்த

மழை நீரருந்த மனதினில் மோகம்.... மோகம்.... மோ..கம் "


அந்த மோகத்தின் இயேசுதாஸ் கொடுக்கும் அழுத்தம் நமக்கு இந்த பாடலின் மீதே ஒரு மோகத்தை வரவழைக்கிறது. காதல் மேகம் மழை தருகிறதா? இவரின் மோகம் தீருகிறதா? என்று பாடலின் இறுதியில் பார்ப்போம்.


"இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்"?

இந்திர லோகத்து சக்கரவாகம்"


இசையில் மட்டுமா? இவரின் இதயத்திலும் அவளொரு பாகம் ஆகிவிட்டாளே !

அதிலும் இந்த லோகத்து சக்கரவாகம் இல்லை, இந்திர லோகத்து சக்கரவாகமாம். (சக்ரவாகம் மழையை மட்டுமே அருந்தி உயிர் வாழும் பறவை என்று கேள்விப்பட்டிருக்கிறேன் .உண்மையா?  அறிந்தவர்கள் சொல்லவும்)


ஸ்ரீவித்யா வெட்கப் புன்னகையுடன் மறுபுறம் திரும்பி நிற்க, அவரின் கூந்தல் இவரின் பாடு பொருளாகிறது. 


"பின்னிய கூந்தல் கருநிற நாகம்

பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்"


"நாகக் கூந்தல்" "மேகக் கூந்தல்" எல்லாம் போய் இப்போது "பாப் கட் " "பாய் கட்" வரை வந்தாகிவிட்டது. எனினும் நீண்ட கூந்தல் மேல் ஆண்களுக்கு ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. பெண்களுக்குமே தான்.


யாகம் என்பதே புனிதம் தான். அதிலும் தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகமாம். ம்ம். அத்தோடு கூடவே தன் இதயத்தின் ஏக்கத்தையும் வெளிப்படுத்துகிறார். அவள் எல்லாம் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்பா என்று.


"தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம் - அந்த

தேவதை கிடைத்தால் அது என் யோகம் - அது என் யோகம்"






அட யாருப்பா அது அப்படிப்பட்ட அழகி ? சீக்கிரம் சொல்லேன் என்று ஸ்ரீவித்யா குழப்பத்தோடும் ஆவலோடும் பார்க்க , இப்போது மீண்டும் மியூசிக் மாற்றம். அது ஒரு "அழகிய ராகம் " அருமையோ அருமை போங்கள்!


"ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி

மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி"


கண்ணதாசன் கம்பனின் காதலன் அல்லவா? அவரின் காவிய நாயகியை இந்தப் பாடலிலும் எடுத்தாண்டிருக்கிறார். 


ஒரு பக்கம் பார்த்தாள் மைதிலி மாதிரி இருக்கா, ஒரு பக்கம் பார்த்தா மாதவி மாதிரி இருக்கா, முகத்தை மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி மாதிரி இருக்கு. இப்படியெல்லாம் சொல்லி அவரின் ஆர்வத்தை தூண்டி விட்டு கடைசியில் உண்மையை போட்டு உடைக்கிறார் 


"முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி " என்று ஸ்ரீவித்யாவின் பெயரை. தான் கேட்ட கேள்விக்கு பதில் தானாகவே ஆகிவிட்ட அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறாள் சில நிமிடம். 


தன்னைப் பார்த்து இப்படி ஒரு பாடலைப் பாடினால் ஒரு பெண் என்ன செய்வாள்? குதூகலித்து கொண்டாடி இருக்க வேண்டாமா?அதுதான் இல்லை. வேகமாக வந்து கமலின் கன்னத்தில் அடி கொடுத்து விட்டு சென்று விடுவார் ஸ்ரீவித்யா. என்ன செய்வது? கதை அப்படி. கதை பற்றி நமக்கென்ன கவலை? ஒரு அருமையான பாடல் கிடைத்தது. ரசிப்போம்!


கண்ணதாசன் எம்எஸ்வி காம்போவில் , கமல், ஸ்ரீவித்யாவின் அருமையான நடிப்பில் கே பாலச்சந்தரின் "அபூர்வராகங்கள் "


Youtube Link :


https://youtu.be/P1IwJ9Y-ZQU




முழு பாடல் வரிகள் கீழே :


அதிசய ராகம் ஆனந்த ராகம்

அழகிய ராகம் அபூர்வ ராகம்

அதிசய ராகம் ஆனந்த ராகம்

அழகிய ராகம் அபூர்வ ராகம்

அதிசய ராகம்


வசந்த காலத்தில் மழை தரும் மேகம் - அந்த

மழை நீரருந்த மனதினில் மோகம்.... மோகம்.... மோ..கம்

வசந்த காலத்தில் மழை தரும் மேகம் - அந்த

மழை நீரருந்த மனதினில் மோகம்

இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்

இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்

இந்திர லோகத்து சக்கரவாகம்


அதிசய ராகம் ஆனந்த ராகம்

அழகிய ராகம் அபூர்வ ராகம்


பின்னிய கூந்தல் கருநிற நாகம்

பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்

பின்னிய கூந்தல் கருநிற நாகம்

பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்

தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம் - அந்த

தேவதை கிடைத்தால் அது என் யோகம் - அது என் யோகம்


ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி

மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி

ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி

மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி

முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி

முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி

முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி

அவளொரு பைரவி அவளொரு பைரவி

 


Comments

  1. At the outset thanks for the song selection one of my evergreen melody hits. Wonder how you can think of such a beautiful review as gud as the song itself. Normally when we hear a song the mind gets into the movie storyline or scenes and less importance to the lyrics. But your review have changed it. Lyrics and the words handled by the grt kavinjar is only in the mind with pure music to the heart and nothing more. Its different experience ......grt. keep going.🙏

    ReplyDelete
  2. இந்த பாடலை தேர்வு செய்ததற்கே உங்களை பாராட்ட வேண்டும். அருமையான விமர்சனம். உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?" முழு பாடல் வரிகளுடன்

"மாலைப் பொழுதின் மயக்கத்திலே"

ஒரு பொய்யாவது சொல் கண்ணே "