நிற்பதுவே நடப்பதுவே

 




பாரதியாரை ரசிக்கும் போதெல்லாம் நாம் தமிழையும் ரசிக்கலாம், தமிழைக்கொண்டாடும் போதெல்லாம் நாம் பாரதியாரையும் கொண்டாடலாம்.

"வாழ்வே மாயம் " இந்த ஒற்றை வரியை எத்தனை எத்தனை வார்த்தைகளால் சொல்ல முடியும். எவ்வளவு அழகான சொல் சித்திரமாய் நம் கண்முன் வடித்திருக்கிறார் பாரதியார். இதில் பாரதியாரின் புலமையை வியப்பதா? இல்லை தமிழின் சொல் வளத்தை வியப்பதா? 


நிற்பன, நடப்பன, ஊர்வன, பறப்பன எல்லாம் கனவா ? தோற்ற மயக்கங்களா? "தோற்ற மயக்கம்" பாரதியின் இந்த சொல்லாடல் ஒரு  இன்ப மயக்கத்திற்குள் நமை ஆழ்த்தி ஒரு தள்ளாடல் தருகிறது.


"நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே

நீங்களெல்லாம் சொற்பனந்தானோ

பல தோற்ற மயக்கங்களோ

சொற்பனந்தானோ

பல தோற்ற மயக்கங்களோ


நான் கற்றதும் , பெற்றதும் , பெற்றதாய் நான் எண்ணும் ஞானமும் எல்லாம் அற்ப மாயைகளோ ? அவற்றில் எந்த பொருளும் இல்லையா?


"கற்பதுவே கேட்பதுவே கருதுவதே

நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ

உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ

அற்ப மாயைகளோ

உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ"


என்று தன் ஞானத்தையே ஒரு தராசு தட்டில் ஏந்தி சீர் தூக்கிப் பார்க்கும் வல்லமையை அந்த பராசக்தியை தவிர வேறு யார் பாரதிக்கு அருளியிருக்க முடியும்?


இந்த வானம் வெயில் மரச்செறிவு எல்லாம் கானல் நீரோ ? காட்சிப் பிழை தானோ ? என்று எண்ணி கலங்குகிறார் . 


"போனதெல்லாம் கனவினைப்போல்

புதைந்தழிந்தே போனதனால்

நானும் ஓர் கனவோ

இந்த ஞாலமும் பொய்தானோ'

என்று கேட்கும் போது நமக்குமே ஒரு கலக்கத்தை ஏற்படுத்துகிறார்.

.

"நானும் ஓர் கனவோ

இந்த ஞாலமும் பொய்தானோ"

இந்த வரிகளை கற்பனையின் உச்சம் என்பதா? ஞானத்தின் உச்சம் என்பதா?


"காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்

கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ?" 


என்று கேட்கும் போது கால இயந்திரத்தில் யுகம் கடந்து பயணம் செய்த ஒரு அறிவின் தெளிவு.


சோலையில் இருக்கும் விருட்சங்கள் எல்லாம் ஒரு விதையில் தோன்றியது என்றால் இந்த சோலையை உண்மை என்று கொள்ளலாமா?  இல்லை சோலை என்ற சொல்லே பொய் என்று தள்ளலாமா? 


"சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்

சோலை பொய்யாமோ? இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ? "


நான் காண்பதெல்லாம் ஒருநாள் மறைந்துவிடும் என்றால், மறைந்ததெல்லாம் மறுபடியும் காண்போம் அல்லவா? இப்படிப் பொய்களிலேயே என் விதி முடிந்து விடுமா? இப்படி தத்துவ வெளியில் நம்மை எல்லாம் அழைத்துச் சென்று நடை பழக்கியவர், இறுதியில் காணும் பொருள்களில் எல்லாம் உள் உறைந்து நீக்கமற நிறைந்து காணப்படுவது அந்த சக்தியின் வடிவம் என்ற உண்மை தெளிகிறார். அதை நமக்கு  உரக்கச் சொல்லி பாடலை முடிக்கிறார். 


"வீண்படு பொய்யிலே நித்தம் விதி

தொடர்ந்திடுமோ?

காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை

காண்பது சக்தியாம்; இந்தக் காட்சி நித்தியமாம்."


பாரதி தத்துவம் மட்டுமா எழுதி இருக்கிறார். காதல், பக்தி , தேச பக்தி, சமூகம் , இப்படி அவர் தொடாத தளம்  எது ? பாரதி தமிழின் பெருமை. தமிழனின் பெருமை.



சொப்பனம், தோற்ற மயக்கம், அற்ப மாயை , கானல் நீர், கனவு, பொய் இப்படி ஒரு பொருள் கொண்ட எத்தனை சொற்கள் தமிழில்? ( ஒரு பொருட் பன்மொழி  ) சொற்களின் கருவூலம் நம் தெய்வத் தமிழ் மொழி. 


இசைஞானி இளையராஜாவின் இசையில் இனிய பாடல்

பாரதி படத்தில். 

   


                                  



இதில் பாரதியாக நடித்த சாயாஜி ஷிண்டே அருமை யான நடிப்பு. இது வரை பாரதியார் சிவாஜி மாதிரி இருப்பார் என்று நினைத்து கொண்டு இருந்த நாம் இவரை பார்த்து ஒருவேளை இவர் மாதிரி கூட இருந்திருக்கலாம் என்று எண்ண வைத்தார். ஹரிஷ் ராகவேந்திராவின் இனிய குரலில். இசை , பாடல் வரிகள் , பாடகரின் குரல் வளம் , நடிகரின் திறமை அனைத்தும் மிக மிக அருமையாக அமைந்த பாடல். என் மனம் அமைதி இழக்கும் போதெல்லாம் என்னை அமைதிப் படுத்தும் பாடல். பார்த்து கேட்டு ரசிக்க கீழுள்ள லிங்க்கை Youtube ல் காப்பி, பேஸ்ட் செய்யவும். 


https://youtu.be/84KN3uvBnFE


அடுத்து ஒரு இனிய பாடலுடன் உங்களை விரைவில் சந்திக்கும் உறுதியுடன் உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் தீக்ஷா


Comments

  1. அருமை. அருமை. பாரதியார் பாடல்களுக்கு எல்லாம் இது மாதிரி விளக்கம் கொடுத்தால், அனைவருமே பாரதியார் பாடலை விரும்பி படிப்பார்கள் !!!

    ReplyDelete
  2. நன்றி. தங்கள் கருத்தை தொடர்ந்து பதிவிடவும்

    ReplyDelete
  3. Very nice to see your blog after long time.at the outset appreciate and thank you for the detailed description of this song which i would have listened many many time.I am amazed to see such a wonderful discription of the great poet, which normally we see superficially. Thanks for penning such a great review ad it speak for itself. Tempting to read more such songs of this genius poet again but don't know whether i will understand so deep as you have done. Appreciate your great effort and wish great going in future too.

    ReplyDelete
  4. Thank you sir. Hereafter I too decide to write more.

    ReplyDelete
  5. 🙏🌷நமஸ்காரம்
    பாரதியார் கவிதைகள் என்றால் எனக்கு உயிர்
    அதிலும் அவர் கவிதை பாடலாக அந்த பாடல் வரிகள் உங்கள் திருகாரத்தால் எழுத விமர்சனம் விளக்கமும் மிகவும் சிறப்பு
    இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறேன்
    நன்றிகள்
    சிவகவி
    கோவை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?" முழு பாடல் வரிகளுடன்

"மாலைப் பொழுதின் மயக்கத்திலே"

ஒரு பொய்யாவது சொல் கண்ணே "