சின்னத் தாயவள்








தாய்மை என்பது வரம் இதுவே உலக வழக்கு. ஆனால் அந்த தாய்மையே சாபம் ஆனால் இவள் எங்கு தொடுப்பாள் வழக்கு.



அந்தக் கன்னித் தாய் குந்தி பெற்றெடுத்த குழந்தை பார்போற்றும் கர்ணன். இந்த கண்ணீர் தாய் பெற்றெடுத்த குழந்தை ஊர் போற்றும் நம் நாயகன் 



ஒரு கயவனின் கிறுக்களில் விளைந்த கவிதைக்  குழந்தை அவன். அதனால் கவிதை ருசிக்காமல் போய்விடுமா என்ன?

பத்து மாதம் சுமந்த பந்தம் நினைக்காமல் போய்விடுமா?


பிறந்தவுடன் பிரிந்த அந்தப் பிஞ்சு குழந்தையின் நினைவை  நெஞ்சில் சுமந்து  கண்களில் கண்ணீர்  சுமந்து அலையும் அபலைத் தாய் இவள். ஒருமுறை கூட தாயின் திருமுகம் காணாத அதிர்ஷ்டம் இல்லா மகன் இவன். தன் தாய் இவள்தான் என்று தெரிந்த பின் மறைந்திருந்தாவது அவள் மலர் முகத்தை காணத் தவிக்கும் மகனாக ரஜினியின் நடிப்பு அப்பப்பா என்ன பெர்ஃபார்மன்ஸ். ஃபர்ஸ்ட் கிளாஸ்.  


பாடல் தொடங்கும் முன் வரும் மனதை பிழியும் இசை அதைத் தொடர்ந்து வரும் ஜானகியின் இதயம் பிசையும் குரல். ஜானகி தன் பிஞ்சுக் குழந்தையை கையில் வைத்துக்கொண்டே இந்த பாடலை பாடி இருப்பாரோ என்று நினைக்க வைக்கும் குரல்.. 






ஒரு குழந்தைக்கு தாயான போது அவளே ஒரு குழந்தை தான் அவ்வளவு சின்னஞ்சிறு பெண் அவள். பாடலின் தொடக்க வரிகளை கவனியுங்கள் "சின்னத்தாயவள்" கவிஞர் வாலி. என்ன வரிகள் ,என்ன எழுத்துக்கள்!! 


"சின்னத் தாயவள் தந்த ராசாவே

முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே

சொல்லவா ஆராரோ

நம் சொந்தங்கள் யாராரோ

உந்தன் கண்ணில் ஏன் தான் நீரோ"


தாய் சொல்லித்தான் குழந்தைகளுக்கு சொந்தங்கள் தெரியும்.  நான் உனக்கு தாலாட்டு பாடவா? சொந்தங்கள் எல்லோரையும் அறிமுகப்படுத்தவா?

ஏன் கண்ணா அழுகிறாய்? 



குழந்தையின் வருகைக்காக தாய் அழுகிறாள் பிரசவத்தின் போது. தாய் வருகைக்காக குழந்தை அழுகிறான்.

வெண்ணிலா தேயலாம் , என் நிலா தேயுமா?


 "தாயழுதாளே நீ வர
நீ அழுதாயே தாய் வர
தேய்பிறை காணும் வெண்ணிலா
தேய்வது உண்டோ என் நிலா



"உன்னை நான் எந்தன்

நெஞ்சில் வாங்கிட

மெத்தை போலுன்னை மெல்லத் தாங்கிட

விழி மூடாதோ"


ஜானும்மா! 


அந்தத் தாயின் 25 வருட தாய்மை ஏக்கத்தை இந்த இரண்டே வரிகளில்

கொண்டு வந்து விட்டீர்களே !!

அருமை அருமை.


ஸ்ரீவித்யா பொங்கிப் பெருகும் ஒரு நதிக் கரையின் படித்துறையில் இருந்து மேல் ஏறி வருகிறார். அவர் இதயத்தில் 25 வருடத்திற்கு முன் பிரிந்த தலைமகன் நினைவில் தாய்மை உணர்வு பொங்கி பெருகுகிறது. யாரோடும் பகிர்ந்து கொள்ள முடியாத  இதயத்தின் ரகசிய வேதனைகளை இறைவனோடு தான் பகிர்ந்து கொள்ள முடியும்


இதயத்தில் கேள்விகள். கேள்விகள்.

என் குழந்தை எந்த நிலையில் இருக்கிறதோ என்று அந்த இறைவனிடம் கேட்கிறாள். வரம் வேண்டி பெற்ற பூச்சரம் வெயிலில் வாடுமோ , இறைவன் கோயிலைச் சென்று சேருமோ என்று ஏங்குகிறாள் .


"ஆயிரம் காலம் ஊர்வரம்

வேண்டிட வந்த பூச்சரம்

வெய்யில் வீதியில் வாடக் கூடுமோ

தெய்வக் கோயிலை சென்று சேருமோ"


"எந்தன் தேனாறே" என்ற வரியில்

தேனாறு பாய்கிறது ஜானகியின் குரலில்.




ஸ்ரீவித்யா நடிப்பு அபாரம். முகம் முழுதும் சொல்லவொனா சோகம். கண்ணீர் ததும்ப கடவுளிடம்  முறையீடு. ரஜினி பின்னாலிருந்து பார்க்கையில் ஏதோ ஒரு உள்ளுணர்வு உறுத்த திடுக்கிட்டு திரும்பி பார்ப்பது. ரஜினி "அம்மா அம்மா " என்று உதட்டுக்குள்ளேயே சொல்லி பார்த்துக்கொள்வது. 

கலியுக குந்தியாக ஸ்ரீவித்யாவும் கர்ணனாக ரஜினியும் நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள்.


கடைசியில் ஸ்ரீவித்யாவின் கூந்தல் பூச்சரத்திலிருந்து விழுந்த ஒற்றை மல்லிகை பூவை ரஜினி கையில் எடுத்து கோவில் பிரசாதம் போல் பொக்கிஷமாய் பொத்தி வைத்து கொள்ளும் காட்சியில் பார்ப்போர் உள்ளம் உருகாதோ?


வாலியின் வரிகள், ஜானகியின் குரல் மட்டுமல்ல இளையராஜாவின் இசையும் நம்மை தாலாட்டுகிறது. மணிரத்னத்தின் "தளபதி" இவன்.


https://youtu.be/PwVD0Hutxwo




Comments

  1. மிகவும் சோகமான பாடல் அதுவும் தாய் மகன் பாசம்.ஆழமான வரிகள் மனதை உருக்கும் குரல் மற்றும் இசை இனையாண நடிப்பு.... இவைகளை ஒரு படி உயர்த்தியது உங்கள் விமர்சனம். Yiur reviews is of very high standard to read in all your songs so far. Thinking better and different perspective for a song and in many ways is highlight.keep going.God bless.

    ReplyDelete
  2. நமக்குந்தெரிந்த கதை தான். அதை இசையிலும், பாடல் வரிகளிலும் , குரலிலும், நடிப்பிலும் புது விதமாக சொல்லி அசத்தியிருக்கிறார் கள் ஒவ்வொருவரும். நீங்கள் விமர்சனத்தில் Dheeksha.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?" முழு பாடல் வரிகளுடன்

"மாலைப் பொழுதின் மயக்கத்திலே"

ஒரு பொய்யாவது சொல் கண்ணே "