கண்ணான கண்ணே /Kannana Kanne
ஒவ்வொரு தந்தைக்கும் தன் குழந்தை அதுவும் பெண் குழந்தை இளவரசி தான். தேவதைதான். தேவதைகளிடம் கேட்க ஆயிரம் வரங்கள் இருக்கும், தேவதைகள் பற்றியக் கனவுகளும் ஆயிரம் இருக்கும்.
"கண்ணான கண்ணே கண்ணான கண்ணே " என்று சித் ஸ்ரீராம் தொடங்கும் முதல் வரியே இது குரலா, இல்லை குழலா என்று நம்மை மயங்க வைக்கிறார். என்ன இனிமை. கண்ணே, மணியே என்று அழைப்பதை விட "கண்ணான கண்ணே " என்ற அழைப்பில் என்ன ஒரு அழகு ததும்புகிறது. அவளின் பிஞ்சு விரல் ஸ்பரிசத்திற்காக ஏங்கி கிடக்கும் தந்தை, அவளின் கோபம் தாளாமல் அஜித்தின் கண்கள் கண்ணீர் பொழிய , அதை தாளாத வானமும் மழைநீர் பொழிய தன் கண்ணீரை மழைநீரில் மறைக்க காரை விட்டு இறங்குகிறார் அஜித். தன் தேவதை குழந்தையிடம் அவர் கேட்கும் வரங்கள் இப்படி நீள்கிறது
"கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா
புண்னான நெஞ்சை
பொன்னான கையால்
பூ போல நீவ வா
நான் காத்து நின்றேன்
காலங்கள் தோறும்
என் ஏக்கம் தீருமா
நான் பார்த்து நின்றேன்
பொன் வானம் எங்கும்
என் மின்னல் தோன்றுமா"
அப்பா என்று தெரியாமலே அந்த பெண் குழந்தை அஜித்துடன் கொண்டாடும் பாசம் , அந்த மழைக் காட்சி , அப்புறம் அந்த ரோஜா இதழ் கொண்ட ரோஜா வண்ண குட்டி குழந்தை அனைத்தும் அழகுக் கவிதை.
அவளின் ஸ்பரிசம் பட்டால் இவரின் கண்ணீரும் மழைநீரும் கூட கற்கண்டாய் மாறக்கூடும் என்று ஏங்குகிறார்.
அடுத்து வரும்
"ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ " வை கேட்கையில் நம்மையும் ஒரு குழந்தையாய் மாறி தொட்டிலிலோ அஜித்தின் தோள்களிலோ தூங்கலாமா என்று ஏங்க வைக்கிறார். (ஷாலினி என்னை அடிக்க வராமல் இருக்கட்டும். குழந்தையாய் மாறி என்ற வார்த்தையை அண்டர்லைன் பண்ணி படிக்கவும்)
அலைகடல் துரும்பாய் அவர் அந்த தேவதை படகை தேடுகிறார். தனிமை துயர் எனும் புதை மணலில் புதைய இருந்த அவரை ஒரு குறு நகையை எறிந்து மீட்ட தங்க தேவதை அவள்.
"உன் கூட இருக்கும்போது பாசமா இருக்கு, அவர் கூட இருக்கும்போது பாதுகாப்பா இருக்குமா " என்று அந்த குட்டிப்பெண் சொல்லவும் நயன்தாராவும் அஜித்தும் கண்களால் பேசிக் கொள்ளும் காட்சி, அதன் பிறகு வரும் இந்த வரிகளில் அஜித்தின் மீசைக்குள் ஒளிந்திருக்கும் ஒரு பெருமித குறுநகை அழகு. நயன்தாரா கண்களால் கொள்ளை கொள்கிறார்.
"புதை மணலில் வீழ்ந்து
புதைந்திடவே இருந்தேன்
குறு நகையை எறிந்தே
மீட்டாய் என்னை"
சந்தோஷத்தில் விண்ணுக்கும் மண்ணுக்குமாய் விஸ்வரூப ஊஞ்சல் கட்டி ஆடும் அவருக்கு பிறர் கண் பட்டு ஊஞ்சல் நூல் விட்டுப் போகுமோ என்ற பயமும் மனதிற்குள் ஊஞ்சலாடுகிறது.
மழையைப் பார்த்து ஆடும் மயிலை பார்த்திருக்கிறோம். இதோ இந்த மயிலைப் பார்த்து ஆடும் மழையை பாருங்கள்.
"மயில் ஒன்றை பார்க்கிறேன்
மழையாகி ஆடினேன்
இந்த உற்சாகம் போதும்
சாக தோன்றும் இதே வினாடி"
தாமரை வரிகளா? தங்கத்தாமரை வரிகளா?
சிவாவின் டைரக்சன் அண்ட் இமானின் இசை அருமை அருமை.
வரங்களை வரிசையிட்ட பின் தன் கனவுகளை காணிக்கையாக செலுத்துகிறார்.
"நீ தூங்கும் போது
உன் நெற்றி மீது
முத்தங்கள் வைக்கணும்
போர்வைகள் போர்த்தி
போகாமல் தாழ்த்தி
நான் காவல் காக்கணும்
எல்லோரும் தூங்கும் நேரம்
நானும் நீயும் மௌனத்தில் பேசணும்"
மனதுக்கினியவர்களோடு மனதோடு மௌனத்தில் பேசும் வரம் கிடைத்தால் இனி எல்லாம் சுகமே.
"தந்தைமை போற்றுவோம்"
இனிய பாடலை பார்த்து கேட்டு ரசியுங்கள்.
https://youtu.be/r7yKzF59kso
❤️❤️❤️
ReplyDeleteதீக்ஷா அருமையான ரசித்து ருசித்து தந்தைக்கும் மகளுக்கும் உள்ள உறவினை வரைந்து உள்ளீர்கள் வாழ்க நன்றி💝💗♥️
ReplyDeleteஅஜித்தை பிடிக்காதவர்கள் கூட இந்த பாட்டை ரசிக்காமல் இருக்க முடியாது. பாடலை ரசிப்பவர்கள் உங்கள் விமர்சனத்தை மறக்கவே முடியாது.
ReplyDelete