எவனோ ஒருவன் வாசிக்கிறான்/ Evano Oruvan
நெருங்கினால் சுடும் விட்டு விலகினால் விடும் நெருப்பு. இதுவே நான் அறிந்த உண்மை. "தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா
உன்னை தீண்டும் இன்பம் தோன்றுதையா நந்தலாலா" என்று பாட நான் பாரதி இல்லை ஒரு பாமரன். ஆனால் தள்ளி செல்ல செல்ல சுடும் நெருப்பு ஒன்று உண்டு.
"விலகினால் சுடும் வினோத நெருப்பு. காதல்!"
இதோ இவள் அவனை விட்டு விலகி வந்து விட்டாள் . விலகினால் சுடும் காதல் நெருப்பு இவளை மட்டும் விட்டுவிடுமா? ஊரெங்கும் புயலும் மழையும். இவள் உள்ளத்திலோ புயல் , விழிகளிலோ மழை.
இந்தக் கண்ணனுக்கும் ராதைக்கும் இடையில் அந்த புல்லாங்குழலின் தூது. இருவரையும் இணைக்குமா? இறுதியில் இனிக்குமா? பார்ப்போம் பாடலை.
எவனோ ஒருவன் வாசிக்கிறான் என்று தொடங்கும் முதல் வரியிலேயே நாம் மூழ்கிப்போய் அவர் குரலின் பின்னே பயணம் செல்ல ஆரம்பித்து விடுகிறோம், எங்கே இருந்து அவன் வாசிக்கிறான் என்று தேடி . ஏ ஆர் ரகுமானின் இசையும் நமக்கு துணையாக வருகிறது. இசைக் கலைஞர்களுக்கு இசை கோர்ப்பது ஒரு தவம் என்றால், நம்மை போன்றோருக்கு இசை கேட்பதே ஒரு தவம் தான் . மாதவனோ ஷாலினிக்காக வாசிக்க ரஹ்மானோ நமக்காக வாசிக்க கேட்டு கேட்டு கிறங்குவதைத் தவிர வேறு வழியே இல்லை நாம் தப்பிக்க. காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே அவன் ஊதும் ரகசியம் தேவகானமாக கசிந்து நமக்கெல்லாம் உயிர் ஊட்டுகிறது.
"எவனோ ஒருவன்
வாசிக்கிறான் இருட்டில்
இருந்து நான் யாசிக்கிறேன்
தவம்போல் இருந்து
யோசிக்கிறேன் அதைத் தவணை
முறையில் நேசிக்கிறேன்"
இந்த வரிகளின் கடற்கரையில் படபடக்கும் இரண்டு சிவப்பு வண்ணத் துணிகள் துடிதுடிக்கும் இரண்டு இதயங்களின் குறியீடா?::
சோக முகம் காட்டும் மாதவன் பஸ்ஸிலிருந்து இறங்கி நடந்து வரும்போது பின்னணியில் ஒலிக்கும் இசையின் பரபரப்பு உங்களையும் சேர்த்து ஷாலினியை தேட அழைத்துச் செல்லும்.
தன் தனிமை துயர் துடைக்க அந்த புல்லாங்குழலை துணைக்கு அழைக்கிறாள் இவள்.
"உள்ளே உறங்கும்
ஏக்கத்திலே உனக்கும்
எனக்கும் சாிபாதி" என்று ஏக்கத்தை சரிபாதியாக பங்கு போடும் இவள் கண்களை வருடும் தேனிசையில் கவலைகள் மறக்கிறாள்.
"இன்னிசை மட்டும்
இல்லையென்றால் நான்
என்றோ என்றோ இறந்திருப்பேன்"
இப்படி இசையால் துடிக்கும் இதயங்கள் எத்தனை ?இசையாய் துடிக்கும் இதயங்கள் எத்தனை எத்தனை??
(இந்த இடத்தில் மெருன் கலர் ஷால் போர்த்தி உட்கார்ந்திருக்கும் ஷாலினி அழகோ அழகு. அந்த அழகு பெண்ணின் முகத்தில் சோகம்தான் தாங்க முடியவில்லை)
"இரக்கம் இல்லா
இரவுகளில் இது எவனோ
அனுப்பும் ஆறுதலா " என்று ஆறுதல் கொள்ள நினைக்கிறாள் அவள். குழலுக்கும் அவளுக்கும் ஏக்கம் சரிபாதி என்று எண்ணமிட்ட அவள் குழலிடம் புகார் செய்கிறாள் இப்படி. உன் ஏக்கத்தை எல்லாம் இசைக் கண்ணீராய் வடிக்க உனக்காவது அத்தனை கண்கள் உள்ளது, எனக்கில்லையே என்று.
"எந்தன் சோகம்
தீா்வதற்கு இதுபோல்
மருந்து பிறிதில்லையே
அந்தக் குழலை
போல் அழுவதற்கு
அத்தனை கண்கள்
எனக்கில்லையே"
வைரமுத்துவின் வைர வரிகளில் உருகலாம்
அந்தக் கடைசி வரியை சுவர்ணலதா பாடும் பொழுது உங்களுக்கும் இதயம் நிரம்பி ததும்பி கண்களில் கசியலாம் , புல்லரிக்கலாம் ,இதயம் ஒருகணம் நின்று துடிக்கலாம்.
ரஹ்மானின் இசை, சுவர்ணலதாவின் குரல், மணிரத்னத்தின் படப்பிடிப்பு, ஷாலினி மாதவனின் சோகம் சுமந்த நடிப்பும் அனைத்தும் சேர்ந்து இந்தப் பாடலை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லும்.
எங்கே இருக்கிறான்?
"எனக்காக வாசிக்கும் எவனோ ஒருவன்"
(என்று கேட்கும் அனைவரையும் ஏங்க வைத்து விடும் இந்த பாடல்)
உங்கள் தனிமைக்கு துணையாக இந்த பாடல். இயர் போன் போட்டு கேட்க ஒரு புது அனுபவம் கிடைக்கும்.
(வீடியோவில் பாதி பாடல் தான் உள்ளது.
கடைசி வரிகள் ஆடியோவில் மட்டும் தான் நீங்கள் கேட்க வேண்டும்)
இந்த வர்ணனையை ரஹ்மான், மணிரத்னம், சுவர்ணலதா .... அனைவரும் பார்க்க வேண்டும். இந்தப் பாடலில் இவ்வளவு விசயம் உள்ளதா என்று வியக்க வேண்டும்.
ReplyDelete"விலகினால் சுடும் வினோத நெருப்பு. காதல்!"
ReplyDeleteAwesome ❤️❤️❤️