சொன்னது நீதானா /Sonnadhu Needhana

இன்னொரு நேயர் விருப்ப 

பாடல் இது. தன் கணவனையே கடவுளாக நினைக்கும் தமிழ் நாயகி அவள். கடவுள் கைவிட்டு விட்டான் என்பதை கூட நம்பி விடுவாள்.  ஆனால் தன் கணவன் கைவிட்டு விட்டான் என்பதை  நம்ப மறுக்கும் பெண் மனம். 

அவன் அப்படி என்ன சொல்லக் கூடாத விசயத்தை சொல்லிவிட்டான். கேட்க கூடாததை கேட்டு விட்டான்.  

வரவிருக்கும் நாட்களில் நடைபெறவிருக்கும்  அறுவை சிகிச்சை வெற்றி பெறாமல் அவன் மரணிக்க நேர்ந்தால் வேறு ஒருவரை மணந்து மகிழ்வுடன் வாழ வேண்டும் என்பதே அவன் கேட்டது. தன் மனைவி மேல் என்ன ஒரு காதல் இருந்தால் இப்படி ஒரு வார்த்தை அவன் வாயிலிருந்து வரும்? (படம் வெளிவந்த வருடம் 1962. விதவைத் திருமணம் என்றாலே நினைத்து கூட பார்க்க முடியாத காலகட்டம் அது அந்த சமயத்தில் இப்படி ஒரு புரட்சிகரமான கருத்தை முன்வைத்ததற்கே ஸ்ரீதருக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்) இப்படி ஒரு வார்த்தையை கொடுமைக்கார கணவன் வாயிலிருந்து கேட்டாலே தாங்க முடியாது ஒரு பெண்ணால். இவனோ மணமகளையே திருமகளாக நினைத்தவன். 


அவளோ திருமகளுக்கேற்ற  திருமாலாக அவனையே நினைத்தவள். வேதனையில் அவள் இதயமே வெடித்துவிட  இதழ்களிலிருந்து வெடித்துவிழும் வார்த்தைகளால்தான் பாடல் தொடங்குகிறது. 


சொன்னது

நீதானா சொல் சொல்

சொல் என்னுயிரே


சம்மதம்தானா?சம்மதம்தானா ?

ஏன் ஏன் ஏன் என்னுயிரே ,

ஏன் ஏன் ஏன் என்னுயிரே?


இன்னொரு

கைகளிலே யார் யார்

நானா என்னை மறந்தாயா

ஏன் ஏன் ஏன் என் உயிரே. இப்படி ஒவ்வொரு முறை என்னுயிரே என்னுயிரே என்று சுசீலா கதறும் போதெல்லாம் கதாநாயகனின் உயிரே போய் விடுமல்லவா?  

என்னமாய் ஒரு பெண்ணின் மன உணர்வுகளுக்கு இந்த வார்த்தைகளால் உயிர் கொடுத்திருக்கிறார் கண்ணதாசன். 

தெய்வக்கவி! 


என் மனதில்

உன் மனதை

இணைத்ததும் நீதானே

இறுதி வரை

துணையிருப்பேன்

என்றதும் நீதானே?  இப்படி அடுக்கடுக்காய் நாயகி கேள்விகளை கேட்க பதில் சொல்ல முடியாமல்

 கூனிக் குறுகி உட்கார்ந்து இருக்கும்

முத்துராமனின் நடிப்பை பார்க்கும்போது இப்படி ஒரு நிலைமை எந்த ஒரு கணவனுக்கும்  வந்துவிடக்கூடாது என்று மனது நினைப்பது சத்தியம். சிறப்பாக நடித்திருக்கிறார் முத்துராமன். ‌


"தெய்வத்தின்

மார்பில் சூடிய மாலை

தெருவினிலே விழலாமா தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா ?"

இந்த வரிகளின் சுசீலாவின் குரலில வெளிப் படும் வேதனையின் தவிப்பு அதை அப்படியே உள்வாங்கி நடித்திருக்கும் தேவிகாவின் நடிப்பு அப்பப்பா பார்ப்போர் கண்களை குளமாக்கி விடும்.

" ஒரு கொடியில்

ஒரு முறைதான் மலரும்

மலரல்லவா?

ஒரு மனதில்

ஒரு முறைதான்

வளரும் உறவல்லவா?" இப்படி ஒரு உன்னத க் காதலில் விளைந்த கேள்விகளால் வேள்வி நடத்துகிறாள் அவள். அதில் வெந்து தணிகிறான் அவன் . க்ளோசப்பில் தேவிகாவை பார்க்கும் போதெல்லாம் எவ்வளவு அழகான நடிகை என்று தோன்றுகிறதல்லவா? எம்எஸ்வியின் இசையும் சுசீலாவின் குரலும் உங்கள் இதயத்தைத் துளைக்கும். கேட்டு ரசியுங்கள் சொன்னது நீதானா பாடலை.


https://youtu.be/-NCtHKpRP0A


இப்படி உங்களை சோகக் கடலில்

விட்டுச் செல்ல மனம் இல்லாததால் கண்ணதாசன் வாழ்வில் நடந்த ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். காலை 7 மணிக்கெல்லாம் பாடல் பதிவு . முடித்துவிட்டு படப்பதிவிற்கு செல்ல வேண்டும் என்று ஸ்ரீதர் 

எம்எஸ்வி மற்றும் கவிஞரிடம்   இரவே அறிவித்திருக்கிறார். கவிஞர் வழக்கம் போல் நண்பர்களுடன் பார்ட்டி கொண்டாடிக் கொண்டிருந்தார் நடு இரவு வரை எம்எஸ்வி பலமுறை எச்சரித்தும் கவிஞர் கேட்பதாக இல்லை.   டைரக்டருக்கு தெரிந்தால் கோபப்படுவார் என்று எம்எஸ்வி சொல்ல, தெரிந்தால் தானே நீங்கள் டைரக்டரிடம் சொல்லாதீர்கள் என்று சமாளித்திருக்கிறார்.

அடுத்த நாள் காலை கண்ணதாசன் வர லேட்டாக ஸ்ரீதர் கோபத்தில் என்ன விஷயம் என்று கேட்க எம்எஸ்வி நடந்த விஷயத்தை தெரிவித்துவிட்டார்.  லேட்டாக வந்த கவிஞர் ஸ்ரீதரிடம் ஏதோ சொல்லி சமாளிக்க எனக்கு எல்லாம் தெரியும் என்றார் ஸ்ரீதர். எம்எஸ்வி யை ஒரு பார்வை பார்த்த கண்ணதாசன் பேப்பர் எடுத்து கடகடவென்று பாடலை எழுதிக் கொடுத்துவிட்டார். பாடலின் பல்லவியை பார்த்த ஸ்ரீதர் கோபத்தை மறந்து அடக்க முடியாமல் சிரித்து விட்டார்.

எம்எஸ்வி யை பார்த்து கண்ணதாசன் கேட்ட கேள்வி தான் இந்த பாடலின்  முதல் நான்கு வரி.


சொன்னது

நீதானா சொல் சொல்

சொல் என்னுயிரே


சம்மதம்தானா?சம்மதம்தானா ?

ஏன் ஏன் ஏன் என்னுயிரே ,


அவர் நகைச்சுவையாக எழுதினாலும் படத்தின் சோகக் காட்சிக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்று பார்த்தீர்களா? யூர் கிரேட் கவிஞரே!




Comments

Post a Comment

Popular posts from this blog

"கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?" முழு பாடல் வரிகளுடன்

"மாலைப் பொழுதின் மயக்கத்திலே"

ஒரு பொய்யாவது சொல் கண்ணே "